BREAKING

ஜொகூரில் 4 தொகுதிகளில் மஇகா! இந்தியர்கள் வாக்காளிப்பார்களா?

ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஜொகூர் மாநில தேர்தலில், பாரிசான் நேஷனல் சார்பாக 4 தொகுதிகளில் களம் காண்கிறது மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா). தமது பாரம்பரிய தொகுதியான தெங்காரோ தொகுதியை அம்னோவிடம் விட்டுக்கொடுத்து, பெர்லிங் தொகுதியை அக்கட்சி பெற்றுள்ளது.

கெமெலா, புக்கிட் பத்து, பெர்லிங் மற்றும் காஹாங் ஆகிய தொகுதிகளில் களம் காணும் ம இகா, தற்போதைய ஆட்சிக்குழு உறுப்பினர் இரவின் கிருஷ்ணசாமியை தவிர்த்து மூன்று புதிய வேட்பாளர்களை களம் இறக்குகின்றது. காஹாங் தொகுதியில் நீண்டநாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வித்யானந்தனை இந்த முறை மஇகா தலைமைத்துவம் களம் இறக்கவில்லை.

கெமெலா தொகுதியில் போட்டியிட்டு வென்ற சரஸ்வதிக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாத வேளையில், மஇகாவுக்கு ஒரு பாதுகாப்பான தொகுதியாக கருதப்படும் கெமெலாவில் மாநில மஇகா தலைவர் இரவின் கிருஷ்ணசாமியே களம் இறங்குகின்றார். காஹாங் தொகுதியில் ருகேந்திரன், புக்கிட் பத்து தொகுதியில் குமரன், மற்றும் பெர்லிங்கில் பன்னீர்செல்வம் ஆகியோர் பாரிசான் நேஷனல் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.

இந்தியர்கள் பக்காத்தான் ஹாராப்பான் மீது கோபம் கொண்டுள்ள வேளையில், இந்தியர்கள் வாக்கு தங்களுக்கு திரும்பும் என்ற நம்பிக்கையில் மஇகா களம் கண்டாலும், ஆளும் மாடானி அரசாங்கத்தில் மஇகாவும் ஒரு கூட்டணி கட்சி என்பதை மக்கள் மறந்து விடுவார்கள் என்ற சந்தடி சாக்கில் ம இகா நம்புவது நடக்குமா என்பது தேர்தல் முடிவுகளின் போது தெரியும்.

மஇகா களம் காணும் 4 தொகுதிகளில் பெர்லிங் தொகுதியில் மட்டுமே பத்து சதவீதத்துக்கு மேல் இந்தியர்கள் உள்ளனர். கெர்லிங்கில் 13% இந்திய வாக்களர்கள் உள்ள நிலையில், புக்கிட் பத்து தொகுதியில் 8% இந்திய வாக்களர்களும், கெமெலா தொகுதியில் 5.5% இந்திய வாக்காளர்களும், காஹாங் தொகுதியில் 3% இந்திய வாக்காளர்களும் உள்ளனர்.

இந்தியர்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்றும் நம்பும் மஇகா, அதிகமான இந்தியர்கள் வசிக்கும் பெக்கோ (19%), ஸ்கூடாய் (14%), கோத்தா இஸ்கண்டார் (13%), மெங்கிபோல் (13%) மற்றும் தெனாங் (11.5%) போன்ற தொகுதிகளை ஏன் கேட்டு பெறவில்லை என்பது புதிரே.

இந்தியர்கள் இன்னும் ம இகாவை நம்பவில்லை என்ற அச்சத்தில், அம்னோவின் பலமான தொகுதிகள் இரண்டை கேட்டு பெற்று, புக்கிட் பத்து மற்றும் பெர்லிங்கில் சும்மா போட்டியிட்டுத்தான் பார்ப்போமே என்ற நினைப்பில் ம இகா களம் காண்பதாக தெரிகிறது. ஜொகூர் மாநிலத்தில் மஇகா மீதான இந்தியர்களின் வெறுப்பு அப்படியே உள்ளது என்ற அச்சத்திலேயே அக்கட்சி இந்தியர்கள் அதிக வசிக்கும் தொகுதிகளை புறக்கணித்திருக்கிறது என புரிகிறது.

ஜொகூரில் இந்து இடுகாடுகள் “மாயமான” கதைகளில் இந்தியர்களின் கோபம் மஇகாவின் மீது இன்னும் அப்படியே இருப்பதால், மஇகா இந்திய வாக்காளர்களை சந்திக்க தைரியம் இல்லாமல் உள்ளது என்பது திண்ணம். – மைமக்கள்குரல்.கோம்

Leave a Reply

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading